காசிமேடு துறைமுகத்தில் தீவிபத்து படகு உதிரி பாகங்கள் தீயில் எரிந்து நாசம்

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வார்பு பகுதியில் உடைந்த படகுகளின் உதிரி பாகம் போட்டு வைத்திருக்கும் இடம் அமைந்துள்ளது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி அங்கிருந்த மீனவர்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராயபுரத்தில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அங்கு இருந்த படகின் உதிரிபாகங்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் யாரேனும் சிகரெட் பிடித்து நெருப்புத் துண்டை எறிந்தார்களா, அதன் மூலம் தீப்பற்றியதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: