சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வீட்டு லாக்கரில் மாயமான 100 சவரன் நகை பீரோவில் மீட்பு: போலீசார் சோதனையில் சிக்கியது; மன்னிப்பு கேட்ட ஐடி ஊழியர்

சென்னை: வீட்டு லாக்கரில் இருந்து 100 சவரன் நகைகள் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின்படி, சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் சோதனை செய்தபோது, அனைத்து நகைகளும் பீரோவில் இருந்து பத்திரமாக இருந்தது. அதை மீட்ட போலீசார் புகார் அளித்த நபரிடம் ஒப்படைத்தனர். சென்னை எம்.ஜி.ஆர். நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் ஐடி ஊழியர் சரவணன் (36). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். பிறகு, அதிகாலை எழுந்து பார்த்த போது, வீட்டில் இருந்த லாக்கர் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். லாக்கரில் 100 சவரன் நகை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சரவணன் எம்.ஜி.ஆர். நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி அசோக் நகர் உதவி கமிஷனர் தனசெல்வன் தலைமையில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு சென்று, வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அப்போது வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் வராத நிலையில் லாக்கரில் இருந்த நகைகள் மட்டும் எப்படி மாயமானது என்று புகார் அளித்த ஐடி நிறுவன ஊழியர் சரவணன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

பிறகு சந்தேகத்தின்படி வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை போலீசார் சோதனை செய்தனர். அதன் லாக்கரில் இருந்து மாயமானதாக கூறிய 100 சவரன் நகைகள் அனைத்தும் இருந்ததை கண்டுபிடித்தனர். நகைகளை பார்த்ததும் புகார் அளித்த சரவணன், நாங்கள் நகைகளை பீரோ மற்றும் லாக்கரில் வைப்பது வழக்கம். காலையில் தூங்கி எழுந்து பார்த்தபோது லாக்கர் திறந்து கிடந்ததால் வீட்டில் உள்ள பீரோவை சோதனை செய்யாமல் புகார் அளித்துவிட்டேன் என்றுகூறி மன்னிப்பு கோரினார். அதைதொடர்ந்து எம்ஜிஆர்.நகர் போலீசார் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்று கூறி, நிம்மதி பெரும் மூச்சு விட்டனர். இருந்தாலும் போலீசார் புகார் அளித்த சரவணனிடம் காவல்துறையின் நேரத்தை வீணடித்து நாடகமாடினாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் எம்ஜிஆர். நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: