திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்பு தளம் அமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.105.08 கோடி செலவில், மொத்தம் 1,42,450 மெ.டன் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியான நெல்மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றை இயற்கை பேரிடர் மற்றும் மழை பொழிவுகளில் இருந்து பாதுகாப்பாக சேமித்து வைத்திட 10 மாவட்டங்களில் 12 இடங்களில் 2,86,350 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் ரூ.238.07 கோடி மதிப்பீட்டில் நிறுவ ஆணையிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இவற்றில் பணி முடிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 1,42,450 மெ.டன் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், சிங்கம்புணரி, அரியலூர் மாவட்டம் அரியலூர், ஆண்டிமடம், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, பேரணாம்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, திண்டுக்கல் மேற்கு, திருச்சி மாவட்டம் மருங்காபுரி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, சேலம் மாவட்டம் மேட்டூர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் என மொத்தம் ரூ.54 கோடி மதிப்பீட்டில் 28,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், தலைமை செயலகத்தில் இருந்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆணையர் ராஜாராமன் கலந்து கொண்டனர்.நாமக்கலில் இருந்து காணொலி காட்சி வாயிலாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் கே.பொன்னுசாமி, பி.ராமலிங்கம், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியான நெல்மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

Related Stories: