தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்ப்பாயத்தை சாமான்ய மக்களும் பயன்படுத்தி நிவாரணம் பெறவேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுறுத்தல்

சென்னை: தொலைதொடர்பு, ஒலிபரப்பு மற்றும் சைபர் துறைகளில் உள்ள தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சாமானிய மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுறுத்தினார். டெல்லியில் உள்ள தொலைதொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சார்பில், சென்னையில் தொலைதொடர்பு, ஒலிபரப்பு மற்றும் சைபர் பிரிவுகளின் பிரச்னை மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கு நடந்தது.

இந்த நிகழ்ச்சியை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தொடங்கி வைத்தார். கவுரவ விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க., எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.சங்கர நாராயணன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சியில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்பொது, தற்போது தகவல் தொழில்நுட்ப வசதிகள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், தொலைதொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பெரிய நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மட்டும் என்று நினைக்க வேண்டாம். சமானிய மக்களும் இந்த தீர்ப்பாயத்தை பயன்படுத்த வேண்டும். இங்கு தொலைதொடர்பு, கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள், ஆதார், விமான கட்டணம் என்று பல தரப்பட்ட வழக்குகளை தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்றார்.

பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசும்போது, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களைவிட தொலை தொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு அதிக அதிகாரம் உள்ளது. பண்டிகை காலங்களிலும், அவசரத்துக்காகவும்  ஊருக்கு செல்லும் நேரத்தில் விமான டிக்கெட் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து திருச்சிக்கு 18 ஆயிரம் ரூபாய், சென்னையில் இருந்து டெல்லிக்கு 60 ஆயிரம் ரூபாய் என்று இஷ்டம்போல வசூலிக்கின்றனர். இதுதொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தீர்ப்பாயத்தின் தலைவர் டி.என்.பட்டேல் வரவேற்றார். தொலைதொடர்பு தீர்ப்பாய வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் மன்ஜூல் பாஜ்பாய் நன்றியுரையாற்றினார்.

Related Stories: