துருக்கியில் பிப்.6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவிப்பு

துருக்கி: துருக்கியில் பிப்.6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மாலத்யா நகரில் உள்ள ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் இருந்து இந்தியாவை சேர்ந்த விஜய்குமாரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

துருக்கி, சிரியாவில் பிப்.6ம் தேதி மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 12 ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. 24,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். துருக்கியில் மீட்புப் பணியில் அரசு ஊழியர்கள், பல்வேறு நாடுகளின் பேரிடர் மீட்பு வீரர்கள், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 7 லட்சம் பேர் ஈடுபட்டிருக்கின்றனர்.

துருக்கி நிலநடுக்கத்தின்போது விஜய்குமார் என்ற இந்தியர் காணாமல் போனதாக இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது. இந்தியரை தேடும் பணிகள் நடந்துவந்தநிலையில், விஜய்குமார் இறந்துவிட்டதை தூதரகம் உறுதி செய்துள்ளது.

விஜய் குமார் தொழில் நிமித்தமாக துருக்கி சென்றிருந்ததும், மலாட்டாயா என்ற பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஹோட்டலின் இடிபாடுகளிலிருந்து 6 நாட்களுக்கு பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் உயிரிழந்த விஜய்குமார், உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்குமார் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: