திருச்சுழியில் குண்டாற்று கரையில் மண் அரிப்பு: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழியில் குண்டும், குழியுமாக இருக்கும் குண்டாற்று கரைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழியில் பிரசித்தி பெற்ற துணைமாலையம்மன் சமேத திருமேனிநாதர் ஆலயம் உள்ளது. இந்த கோயில், பாண்டிய நாட்டில் உள்ள 12 திருத்தலங்களில் 10வது திருத்தலமாக கருதப்படுகிறது. மேலும், திருச்சுழியில் உள்ள குண்டாற்றில் புனித நீராடுவது காசி, கங்கையில் நீராடுவதற்க்கு இணையாகும் என இப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர். இதனால், இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி செய்வதற்கு தினசரி பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்.

குறிப்பாக முக்கிய அமாவாசைகளான ஆடி, புரட்டாசி, தை மாத அம்மாவாசை தினங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். மேலும், இத்திருத்தலத்தில் ஆடி மாதம் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவின்போது துணை மாலையம்மன் உடனுறை திருமேனிநாதர் சமேதமாக இக்குண்டாற்றில் எழுந்தருளி, பக்தர்களுக்கு கட்சியளிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறும். இந்த நிகழ்வைக்கான சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இக்குண்டாற்றில் கூடி ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை ஆற்றின் கரையோரம் உள்ள வழித்தடத்தை பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த பருவமழையின்போது ஏற்பட்ட மண் அரிப்பால் வழித்தடம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால், இங்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் ஒருவித அச்ச உணர்விலும் சிரமத்திலும் வந்து செல்கின்றனர். எனவே, இப்பகுதியில் மண் அரிப்பை தடுக்கும் விதமாக நிரந்தர தீர்வு காண பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: