போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க முடியாது : அண்ணா பல்கலைக்கழகம்!!

சென்னை: பொறியியல் கல்வி தரத்தை வலுப்படுத்தும் விதமாக போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகளின் அங்கீகார நீட்டிப்பை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தை பெற்றுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள் இல்லை என்று தொடர் புகார்கள் எழுந்தன. தனியார் கல்லூரிகளுக்கு அவற்றின் தரம், வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு அடிப்படையில் தரக்குறியீடு வழங்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தரம் குறைந்த பொறியியல் கல்லூரிகளை களை எடுக்கும் வகையில் வரும் 2023,2024 கல்வி ஆண்டு முதல் உறுப்பு கல்லூரிகளுக்கு தரம் மதிப்பின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட கல்லூரியின் தரம், பேராசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த தரக்குறியீடுகளுடன் அடுத்த கல்வி ஆண்டிற்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க தவறும் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. இதனால் தரம் குறைந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வது தடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய தரக்கொள்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Related Stories: