ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்துமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், விதிகளுக்கு உட்பட்டு அணிவகுப்பை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.எல்.ராஜா, ஜி.ராஜகோபாலன், எஸ்.ரவி, ஜி.கார்த்திகேயன், ரபு மனோகர் ஆஜராகி வாதிட்டனர். தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்தது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்’’ என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாற்றுக் கொள்கை கொண்ட அமைப்புகள் இருக்கின்றன என்பதற்காக ஒரு அமைப்பின் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்க முடியாது. அரசின் முடிவு, பொது நலன் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர கொள்கை, அரசியல் சார்பு அடிப்படையில் இருக்கக் கூடாது. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளான பேச்சு உரிமை மற்றும் கருத்து  சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். . ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேணி அமைதியான முறையில் பேரணி, அணிவகுப்பு, பொதுக்கூட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டுமென்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அனுமதி அளிக்க மூன்று தேதிகளை குறிப்பிட்டு அணிவகுப்புக்கு அனுமதி கோரி அரசிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விண்ணப்பிக்கவேண்டும். அந்த மூன்று தேதிகளில், ஒரு தேதியில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒழுக்கத்தை கடைபிடித்து அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும்.

பிறரை  தூண்டும் வகையில் பேரணி நடத்தக்கூடாது. அமைதியான முறையில் அணிவகுப்பு பேரணி நடைபெறுவதை அந்த அமைப்பு உறுதிசெய்ய வேண்டும். அணிவகுப்புக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

Related Stories: