சென்னையில் 10 அரசு பள்ளிகளில் இளைஞர் பாராளுமன்ற போட்டி: மேயர் பிரியா பார்வையிட்டார்

தண்டையார்பேட்டை: சென்னையில் 10 அரசு பள்ளிகளில் கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கிடையே இளைஞர் பாராளுமன்ற போட்டி நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியை மேயர் பிரியா நேரில் பார்வையிட்டார். உலகிலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் முக்கியமாக கருதப்படுவது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற நடைமுறைகள். இந்தப் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற நடைமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், மாணவர்களின் ஆளுமை திறனை மேம்படுத்தும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இளைஞர் பாராளுமன்றம் அமைத்து செயல்படுத்தப்படும் என  மேயர் பிரியா மாமன்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், மாநகராட்சியின் கீழ் இயங்கும் 70  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவர்களை கொண்டு இளைஞர் பாராளுமன்றம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களில் 20 நபர்களை உறுப்பினர்களாக கொண்டு, இளைஞர் பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் பாராளுமன்ற செயல்பாடுகள் ஜனநாயக முறைப்படியும் மாணவர்களை நல்வழிப்படுத்தக்கூடிய தலைப்புகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்த தலைப்புகளிலும் நடைபெறுவதை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் ஆகியோரால் கண்காணிக்கப்படுகிறது. பள்ளிகளில் நடத்தப்பட்ட இளைஞர் பாராளுமன்றம் தற்போது உதவிக் கல்வி அலுவலர்கள் நிர்வாகத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு இடையே நேற்று தண்டையார்பேட்டை மண்டலம், 42வது வார்டுக்குட்பட்ட புத்தா தெரு, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதேபோல் சென்னையில் 35வது வார்டுக்கு உட்பட்ட சர்மா நகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் மண்டலம், 142வது வார்டுக்குட்பட்ட சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் 138வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம், 57வது வார்டுக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை சென்னை உயர்நிலைப்பள்ளி, திருவிகநகர் மண்டலம், 71வது வார்டுக்குட்பட்ட எம்.எச்.சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் 75வது வார்டுக்குட்பட்ட படவேட்டம்மன் கோயில் தெரு சென்னை உயர்நிலைப்பள்ளி, அண்ணாநகர் மண்டலம் 107வது வார்டுக்குட்பட்ட சுப்பராயன் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம், 122வது வார்டுக்குட்பட்ட சூளைமேடு சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் 123வது வார்டுக்குட்பட்ட வன்னிய தேனாம்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி என 10 பள்ளிகளில் இளைஞர் பாராளுமன்றப் போட்டிகள் நடைபெற்றது.

இதனைத் தொடங்கி வைக்கும் விதமாக, தண்டையார்பேட்டை மண்டலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேயர் நேற்று இந்த போட்டியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சிகளில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரேணுகா, விஜயலஷ்மி, துணை ஆணையாளர்கள் சரண்யா, அரி, சிவகுரு பிரபாகரன், கல்வி அலுவலர்கள். ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: