ஈரோடு பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிமனையில் நேற்று தொழிற்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
ஈரோட்டில் நடந்த அதிமுகவின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பச்சை பொய்களை, பரப்புரை என்ற பெயரில் அவிழ்த்து விட்டிருக்கிறார். நீங்கள் எத்தனை முகமூடிகளை போட்டுக்கொண்டு ஈரோடு தேர்தல் களத்திற்கு வந்தாலும், ஈரோடு பூகம்பத்தில் அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் மறையும் என்பது உறுதி.
அதிமுக ஆட்சி காலத்தில். நிர்வாகத்தை சீரமைக்க முடியாமல் ரூ.2.63 லட்சம் கடன் சுமையை வைத்து விட்டு சென்றுள்ளேன் என எடப்பாடி பழனிசாமி தைரியமாக கூறுகிறார். இது முன்னாள் முதல்வருக்கு அழகா?. பேகசஸ் என்ற பெயரில் கிரேக்க குதிரையின் வடிவில் சின்னம் வைத்தார்களே, அது கட்சியின் நிதியில் வைத்தார்களா? என கூறட்டும். அதன்பின் பேனா சின்னம் குறித்து சொல்கிறேன். திமுகவிற்கு தோல்வி பயம் எந்த காலத்திலும் கிடையாது.
நாங்கள் மாபெரும் வெற்றியை பெறுவோம். ஜனநாயக முறையில் கூட்டணி கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். கூட்டணி தர்மத்தை மதித்து அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியை செய்கிறோம். நாங்கள் அதிமுகவைபோல கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதியை பறித்துக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.