தண்டையார்பேட்டை நேரு நகர் ரயில்வே கேட் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: தினமும் மணிக்கணக்கில் தவிக்கும் மக்கள்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேரு நகர் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், தினந்தோறும் அவதிக்குள்ளாகும் நிலையை போக்க கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் 2 ரயில்வே கேட் உள்ளது. இந்த பகுதி வழியாக தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வியாசர்பாடி கூட்ஸ் செட்டிற்கு தினம்தோறும் சரக்கு ரயில் செல்வது வழக்கம். இதனால், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியில் ரயில்வே கேட் ஒரே நேரத்தில் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும், அந்த பகுதியில் 3 தனியார் பள்ளிகள், ஒரு மாநகராட்சி பள்ளி உள்ளது. ரயில்வே கேட் மூடும்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலக பணிக்கு செல்பவர்கள், நடத்து செல்பவர்கள் என அனைவரும் காலை, மாலை வேளையில் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வியாசர்பாடியில் இருந்து சரக்கு ரயில் தண்டையார்பேட்டை நோக்கி வந்தது. இதற்காக, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ரயில்வே கேட் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியில் சரக்கு ரயில் பாதியிலேயே நின்றது. 1 மணி நேரத்துக்கு மேலாக சரக்கு ரயில் நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் கடும்  போக்குவரத்து நெரிசல் காரணமாக தண்டையார்பேட்டை - எண்ணூர் நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோல், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தன. இதை தொடர்ந்து மெதுவாக சரக்கு ரயில் சென்றது. ஆனாலும், ரயில்வே கேட் திறக்காததால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் நின்று கொண்டிருந்தனர். மாற்றுப்பாதையில் செல்ல வழியில்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், ஆம்புலன்சில் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்பவர்களும் தவித்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன்பிறகு வாகனங்கள் செல்ல பல மணி நேரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தடுக்கும் விதமாக மேம்பால கட்டுமான பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: