ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு ரூ.27 கோடி மதிப்பில் 250 படுக்கைகள் நவீன வசதியுடன் கூடுதல் கட்டிடம்: 12 மாதங்களில் முடிக்க திட்டம்

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனை, கடந்த 1880ம் ஆண்டு ராமசாமி முதலியாரால் தொடங்கப்பட்டது. இவர் பெயரின் சுருக்கமாகவே ஆர்எஸ்ஆர்எம் என பெயர் பெற்றது. இங்கு சென்னை மட்டுமின்றி செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பிரசவம், கர்பபை பிரச்னை உள்ளிட்ட சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் தற்போது 550 படுக்கை வசதிகள் உள்ளன.  இதனால், சிகிச்சைக்கு வருபவர்கள் போதிய வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் முர்த்தியிடம்  கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து அவர் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனையடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்பேரில், ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனைக்கு நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை கூடத்துடன் 250 படுக்கைகள் ெகாண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

4 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கலந்து கொண்டு கட்டிட பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘இந்த மருத்துவமனை வட சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதி மக்களுக்கான வரப்பிரசாதமாக உள்ளது. இங்கு ஒரு மாதத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் 1000 சுகப்பிரசவம் பார்க்கப்படுகிறது. குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்காக இன்குபேட்டர்கள் வசதி நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை செயல்படுகிறது. இதனால், இங்கு கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதன்பேரில், இந்த மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன  வசதிகளுடன் ரூ.27 கோடி மதிப்பீட்டில் 250 படுக்கை வசதிகள் கொண்ட 4 மாடி  கட்டிடம் கட்டப்பட உள்ளது. ஒரு வருட காலத்தில் நிறைவுப்பெற்று, விரைவில் மக்கள்  பயன்பாட்டிற்கு வரப்படும்,’’ என்றார். நிகழ்ச்சியில், ராயபுரம் பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், செந்தில்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் சாந்தி, பொதுப்பணி துறை அதிகாரிகள், மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் திமுகவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: