நெல்லை களக்காட்டில் ரூ1 கோடி வைடூரியக்கல்லுடன் சிக்கியவர்களிடம் தீவிர விசாரணை

களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 1990 மற்றும் 1995ம் கால கட்டங்களில் வைடூரியக்கல் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்ச்சியாக நடந்தது. இதில் ஈடுபட்ட கேரள கும்பல் உள்ளிட்ட சிலரை வனத்துறையினர் கைது செய்து வந்தனர். மேலும் வைரம் கடத்தல் கும்பலுக்கும், வனத்துறையினருக்கும் இடையே இரண்டு முறை துப்பாக்கிசூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஒரு வனத்துறை அதிகாரிக்கும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்ததால் அப்போது அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அன்றைய கால கட்டத்தில் களக்காடு வைடூரியக்கல் விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், களக்காடு போலீசார் நேற்று மஞ்சுவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைப் பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர்கள் வைடூரியக்கற்களை மறைத்து வைத்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், மஞ்சுவிளையை சேர்ந்த முன்னாள் கிராம வனக்குழு தலைவர் சுசில்குமார் (57), வேல்முருகன் (42) என்பது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட அரை கிலோ வைடூரியக்கற்களையும் களக்காடு வனத்துறை அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். வைடூரியக்கற்களின் மதிப்பு ரூ.1 கோடி வரையிருக்கலாம் என கூறப்படுகிறது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன், களக்காடு வன சரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் பிடிபட்ட இரண்டு பேரிடமும் வைடூரியக்கற்கள் எப்படி வந்தது, வனப்பகுதியில் இருந்து கடத்தப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக சிக்கிய இருவரையும் மீண்டும் போலீசில் ஒப்படைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து துணை இயக்குனர் ரமேஷ்வரன் கூறுகையில், அவர்களிடம் உள்ள வைடூரியக்கற்கள் களக்காடு மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே 2 பேரையும் மீண்டும் போலீசில் ஒப்படைக்க உள்ளோம் என்றார். அதன்படி இன்று அவர்கள் களக்காடு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: