அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை நேற்று ஒரு நாள் ஏற்றத்துக்கு பிறகு இன்று மீண்டும் சரிவு..!!

மும்பை: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நேற்று ஒரு நாள் ஏற்றத்துக்கு பிறகு இன்று மீண்டும் சரிந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்து வந்தன. இதனால் அந்நிறுவன பங்குகளை அடமானம் வைத்து வாங்கிய சுமார் 83,000 கோடி ரூபாய் கடனை முன்கூட்டியே செலுத்தியுள்ளது. இது தவிர அதானி குழும நிறுவனங்கள் தர குறியீடுகள் தகுதியானவை தான் என சர்வதேச தர ஆய்வு நிறுவனமான ஜே.பி.மோர்கன் தெரிவித்துள்ளது. இவற்றின் எதிரொலியாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் நேற்று கணிசமான உயர்வை கண்டது.

இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 15 சதவீதம் அதாவது ரூ.323 குறைந்து ரூ.1834-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு விலை ரூ.44 குறைந்து ரூ.554-ல் வர்த்தகமாகிறது. அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவீதம் அதாவது ரூ.9 குறைந்து ரூ.172-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை ரூ.65 குறைந்து ரூ.1248ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.38 சரிந்து ரூ.763ஆகவும், டோட்டல் கேஸ் பங்கு ரூ.69 சரிந்து ரூ.1324ஆகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.3 குறைந்து ரூ.415ஆக வீழ்ச்சியடைந்தது.  முன்னதாக அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

Related Stories: