முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்று டெல்டாவில் ஒன்றிய குழு ஆய்வு: சேதமான பயிர்களை காட்டி விவசாயிகள் முறையீடு

நாகப்பட்டினம: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒன்றிய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் 31ம் தேதி இரவு முதல் 4ம் தேதி வரை கனமழை பெய்தது.

பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளித்தனர். அதன்படி ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஈரப்பத தளர்வு அறிவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பும்படி பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து, சென்னை தரக்கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூரு  தரக்கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், போயோ, தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஒன்றிய குழுவினர் நேற்று நாகப்பட்டினம் வந்தனர்.

தலைஞாயிறு, கச்சனம், வலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். நெல்லின் மாதிரிகளை எடுத்து தாங்கள் கொண்டு வந்த இயந்திரத்தின் மூலம் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். நெல்லின் மாதிரிகளை ஒரு கவரில் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அப்போது விவசாயிகள் அறிக்கையை காலதாமதமாக சமர்ப்பிக்காமல் விரைந்து சமர்ப்பிக்க வலியுறுத்தினர். இதேபோல வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவினரிடம், சேதமடைந்த நெல் கதிர்களை விவசாயிகள் கண்ணீர் மல்க காண்பித்தனர்.

மயிலாடுதுறை:  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூர், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், பரசலூர், மூவலூர், குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலம் ஆகிய கிராம ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஒன்றிய அரசு குழுவினர் ஆய்வு செய்தனர். 

Related Stories: