ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ் தந்த பட்டியல் நிராகரிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதற்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அதிமுக சார்பில் முதலில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டு அணியினரும் தங்கள் தரப்பில் பிரசாரம் செய்யும் வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், திடீரென ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்கள் அணி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து, அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த தென்னரசு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில்தான், தேர்தல் ஆணையம் நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் என 40 பேர் கொண்ட பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடைத்தேர்தலில் போட்டியிடாததால் அவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதனால், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் அணியை சேர்ந்த தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை ஓ.பன்னீர்செல்வமோ அல்லது அவரது ஆதரவாளர்களோ இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால், அந்த செலவு முழுவதும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் உள்ளிட்ட யாரும் அதிமுக வேட்பாளருக்கோ அல்லது இரட்டை இலைக்கு வாக்கு கேட்டோ பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களோ இரட்டை இலைக்கு வாக்கு கேட்டால், அந்த செலவு அதிமுக வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.

Related Stories: