சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 162 தனியார் பள்ளிகள் அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு முழுவதும், அரசு உயர்நிலை மற்றும் மேல்னிலைப் பள்ளிகள், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவை தவிர, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. மேலும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் சுமார் 14 ஆயிரம் உள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் 1,300 பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், புதியதாக பள்ளிகள் ெதாடங்க மாநில அரசின் முன் அனுமதி பெற வேண்டும். ஏற்கெனவே அனுமதி பெற்று இயங்கி வரும் பள்ளிகள், 3 ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் பெற வேண்டும். மேலும் 1.1.2017க்கு பிறகு அனைத்து பள்ளிகளும் நகர ஊரமைப்பு இயக்குநரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 2 ஆயிரம் தனியார் சுயநிதிப் பள்ளிகள், தங்கள் அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளன. மேலும், நகர ஊரமைப்பு இயக்குநரிடம் அனுமதி பெறுவதிலும் ஈடுபட்டு வருகின்றன. இவை தவிர சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் சிலர், ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று பள்ளிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பள்ளிக் கல்வித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில்தான், 162 பள்ளிகள் தமிழ்நாடு அரசின் உரிய அனுமதியோ, என்ஓசி என்னும் தடையில்லா சான்றும் பெறாமல் பள்ளிகள் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. அவவை சிபிஎஸ்இ பள்ளிகள் என்பது அதிர்ச்சி தகவலாகும். அந்த பள்ளிகள் குறித்து நடத்திய ஆய்வில், ஒன்றிய அரசின் அனுமதி பெற்றுள்ளதால் தமிழ்நாடு அரசின் அனுமதி எதற்கு என்ற பாணியில் பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, 162 பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய விளக்கம் அளிக்காத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.