பள்ளி கட்டிடம் கட்ட பூமிபூஜை

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி, 5வது மண்டலம், 53வது வார்டு சிபி ரோடு பகுதியில், எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை புதிய பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின்பேரில் புதிதாக பள்ளிக்கூடம் கட்டுவதற்கு, மாநகராட்சி சார்பில் ₹3.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மூலக்கொத்தளம் பகுதியில் ₹3.30 கோடி செலவில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கலந்துகொண்டு புதிய பள்ளிக்கூடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். அப்போது, இந்த பள்ளி கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும். இதன்மூலம், இப்பகுதி மக்கள் மேல் படிப்பிற்காக வெகுதூரம் சென்று படிக்க வேண்டியது இல்லை என தெரிவித்தார். நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, மாநகராட்சி 5வது மண்டல குழு தலைவர் ராமுலு, ராயபுரம் மேற்கு பகுதி திமுக செயலாளர் வ.பெ.சுரேஷ். மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, வட்ட செயலாளர்கள் கவுரிஸ்வரன், திமுகவினர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: