சென்னை: நாகப்பட்டினம் சவுரிராஜ பெருமாள் கோயில் காலசந்தி பூஜை மற்றும் உச்சிக்கால பூஜை நடத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுரிராஜ பெருமாள் கோயில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் விஷ்வரூப சேவை, காலசந்தி பூஜை, உச்சிக்கால பூஜை உட்பட ஆறு கால பூஜைகள் நடத்தபடுவது வழக்கம். காலசந்தி மற்றும் உச்சி கால பூஜையில் படையல் வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டு வந்தது.
இந்த நிலையில் எந்த காரணமும் இல்லாமல் காலசந்தி பூஜை மற்றும் உச்சி கால பூஜை ஆகியவை நிறுத்தபட்டுள்ளது. கோயிலில் அமைந்துள்ள ராமனுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் ஆகிய நான்கு ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யார்கள் பிறந்தநாளின் போது கொண்டாடப்படும் விழாவில், அவர்களுடைய உற்சவ சிலைகள் 10 நாட்களுக்கு வைத்து கொண்டாடபட்டு வரும் நடைமுறையும் நிறுத்தபட்டுள்ளது.
இவை நிறுத்தப்பட்டது ஆகம விதிகளுக்கு முரணானது. கோயிலில் காலசந்தி பூஜை மற்றும் உச்சி கால பூஜை நடத்த உத்தரவிட வேண்டும். ஆழ்வார்களுக்கான உற்சவ பூஜையை மாதம் மாதம் நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். நிரந்தர நாதஸ்வர கலைஞர்களை கோயிலுக்கு நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.