துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அமெரிக்காவில் தெலங்கானா மாணவர் பலி

அலபாமா: அமெரிக்காவில் துப்பாக்கி தவறுதலாக வெடித்த சம்பவத்தில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த எம்எஸ் மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள மாண்ட்கோமெரி நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், அகில் சாய் என்ற 25 வயது மாணவர் உயிரிழந்தார். தகவலறிந்த காவல் துறை அதிகாரிகள், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அங்கு நின்றிருந்த அகில் சாய் (தெலங்கானா மாநிலம்) தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுதொடர்பாக இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

அமெரிக்க காவல்துறை அதிகாரிகளின் மூலம் செய்தியை அறிந்த அகில் சாய்வின் பெற்றோர், இந்திய அரசு, தெலங்கானா அரசிடம் உதவிகளை கோரியுள்ளனர். இறந்த அகில் சாயின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வர உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அகில் சாயின் பெற்றோர் கூறுகையில், ‘தெலங்கானா மாநிலம் மதிரா நகரில் எங்களது குடும்பம் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம், மாண்ட்கோமரியில் உள்ள ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படிப்பை மேற்கொள்வதற்காக அகில் சாய் அமெரிக்கா சென்றிருந்தார்’ என்று கூறினர்.

Related Stories: