மிடில் ஆர்டரிலும் பேட்டிங் செய்ய தயார்: கே.எல்.ராகுல் பேட்டி

நாக்பூர்: இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டி: முதல் டெஸ்ட்டில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ஒரு கடினமான முடிவாக இருக்கும். மிகச்சிறப்பாக விளையாடி உள்ள வீரர்கள் அணியில் உள்ளனர். சில இடங்களுக்கான வீரர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. வீரர்களிடம் பேசப்பட்டு வருகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதற்கான ஆசை இருக்கிறது.

பேட்டிங்கில் நான் நடுவரிசையில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அதை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். அணிக்காக நான் ஏற்கெனவே அதை செய்துள்ளேன். அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களுமே உயர்தர வீரர்கள். அதனால்தான் அவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களில் யார் வேண்டுமானாலும் போட்டியின் நாளில் வெற்றி தேடிக்கொடுக்கக் கூடியவராக மாறலாம். இந்திய ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இதை நாம் வரலாற்று ரீதியாகபார்த்துள்ளோம். ரிவர்ஸ் ஸ்விங்கைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தரமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட எந்த அணியும் இதுபோன்ற ஆடுகளங்களில் ஆபத்தானதாக இருக்கும். ஆஸ்திரேலியா  எப்போதுமே உயர்தர வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலை நாங்கள் அறிவோம், என்றார்.

Related Stories: