கல்குவாரி லாரிகளால் புழுதிக்காடாக மாறிய ஓணம்பாக்கம்-ஜமீன் எண்டத்தூர் சாலை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செய்யூர்: குவாரிகளில் இருந்து வரும் லாரிகளால் புழுதிக்காடாக மாறியுள்ளது. ஓணம்பாக்கம்- ஜமீன் எண்டத்தூர் சாலை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரிலிருந்து ஓணம்பாக்கம், நுகும்பல், நாகமலை, அரியனூர், ஜமீன் எண்டத்தூர் வழியாக மதுராந்தகம் வரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இதில், ஓணம்பாக்கம்- ஜமீன் எண்டத்தூர் வரை சாலையில் 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. குவாரிகளில் இருந்து பகலும் இரவுமாக ஆயிரக்கணக்கான லாரிகளில் எம்சான்ட், பாறைகள்  மற்றும் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு செல்லப்படுகிறது.

இவ்வாறு செல்லும் கனரக வாகனங்கள் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகபாரம் ஏற்றிச்செல்கின்றனர். சாலையில் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் லாரிகள் மேல் தார்பாய்கள் மூடாமல் செல்வது எம்சான்ட் மற்றும் ஜல்லி கற்கள் சாலையில் சிதறி விழுகின்றன.  இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என கிராம மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் தொடர்ந்து லாரிகள் சென்று வருவதால் கிராமப்புற சாலைகள் பழுதாகி புழுதிக்காடாக மாறியுள்ளது. இதன்காரணமாக, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுஅளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.  எனவே, கிராம மக்களின் நலன் கருதி சாலை விதி மீறும் கனரக வாகன ஓட்டிகள் மற்றும் குவாரி நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: