உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள்-வடமாநிலத்தினர் பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை

உடுமலை : உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் திரண்டு, வடமாநிலத்தினர் பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை விடுத்தனர்.

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தேங்காய் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக தேங்காய் உரிக்கும் பணிக்கு வட மாநிலத்தினரை பயன்படுத்துவதால், உள்ளூர் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் ஆண்டியகவுண்டனூரில் வடமாநில தொழிலாளர்கள் உரித்த தேங்காயை ஏற்றிச்சென்ற லாரியை தமிழக தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு சென்ற வருவாய்த்துறையினர் கோட்டாட்சியர் தலைமையில் 7-ம்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தனர்.

இதை நம்பி, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.பின்னர் கோட்டாட்சியர் ஜஸ்வந்த கண்ணாவிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:கடந்த மூன்று தலைமுறைகளாக தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆரம்ப காலத்தில் தேங்காய் ஒன்றுக்கு 10 பைசா வழங்கப்பட்டது. தற்போது 82 பைசா பெற்று வருகிறோம். ஆனால் வடமாநில தொழிலாளர்களுக்கு 55 பைசா கொடுத்து தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபடுத்துகின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கூலி பிரச்னை எங்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில்தான் உள்ளது. விவசாயிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. வியாபாரிகள்தான் சுயநலத்துக்காக, லாப நோக்குடன் இச்செயலில் ஈடுபடுகின்றனர். விவசாயிகளை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: