ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா?: மக்களவையில் காங். எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்..!!

டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? என்று மக்களவையில் உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். ஒன்றிய அரசு ஆன்லைன் விளையாட்டு பற்றிய வரைவு விதிகளில் ஆன்லைன் சூதாட்டம் இடம்பெறாதது ஏன்? என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக அமைச்சர் அளித்த பதிலுக்கும், அவரது அமைச்சகத்தின் செயல்பாட்டுக்கும் முரண்பாடு உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கே உள்ளது என்பது போல அமைச்சரின் பதில் உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளபோது ஒன்றிய அரசின் அமைச்சகம் எவ்வாறு வரைவு விதிகளை வெளியிட்டது என கேள்வி எழுப்பப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகளை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது குறித்து மணீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அரசியல் சட்டத்தின் எந்த அதிகாரத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டது என மணீஷ் திவாரி சாடினார்.

ஆன்லைன் விளையாட்டுக்கும், ஆன்லைன் சூதாட்டத்துக்கும் வேறுபாடு இல்லாத வகையில் ஒன்றிய அரசின் வரைவு விதிகள் உள்ளன. அரசியல் சட்டப்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான உரிமை ஒன்றிய அரசிடம் இல்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே. எந்த சட்ட விதிகளின் அடிப்படையில் வரைவு விதிகள் வெளியிடப்பட்டது என தெரிவிக்க வேண்டும். திறமையை பயன்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுக்கும், ஆன்லைன் சூதாட்டத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை வரைவு விதிகள் வரையறுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்:

ஏற்கனவே 19 மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்டங்களை இயற்றி உள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தை எட்டிய பின் ஒன்றிய அரசு சட்டம் இயற்றும். ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தே உள்ளோம் என கூறினார்.

தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி:

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்துக்கு எப்போது ஒப்புதல் கிடைக்கும் என தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40 இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஒன்றிய அரசு சட்டம் இயற்றும் வரை மாநில அரசுகளே சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: