உப்பாற்று ஓடையில் கழிவுநீர் கலந்த விவகாரம் 3 தொழிற்சாலைகளை மூட உத்தரவு-மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

தூத்துக்குடி : தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியில் மீன் மற்றும் இறால் உள்ளிட்ட கடல் உணவு பொருட்கள்  பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள சில ஆலைகளில் மீன்களை பதப்படுத்துவதற்கும், சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் உப்பாற்று ஓடையில் நேரடியாக விட்டு அவை கடலில் கலப்பதாக புகார் எழுந்தது. கழிவுநீர் கலந்த உப்பாற்று ஓடை தண்ணீர் முழுவதும் ரோஸ் நிறமாக மாறியுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நிலத்தடி நீரும் மாசுபடும் அபாயம் இருப்பதாகவும், கடலில் கலப்பதால் மீன் இனங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்படுவதாகவும்  குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் உப்பாற்று ஓடை பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் சம்பவ இடங்களில் ஆய்வு செய்தனர். மேலும் உப்பாற்று ஓடை தண்ணீரை பரிசோதனை செய்தனர்.

இதில் அந்த பகுதியில் உள்ள இறால்கள் பதப்படுத்தும் 3 ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே உப்பாற்று ஓடையில் கலக்க விட்டு வருவது தெரிய வந்தது.அந்த 3 தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க மின்வாரியத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் அந்த 3 தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த 3 மீன் பதப்படுத்தும் ஆலைகளையும் மூடுவதற்கான உத்தரவையும்  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கி உள்ளனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: