பிரபல ஜவுளிக்கடை குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுச்சேலை திருட்டு: செக்யூரிட்டிக்கு போலீஸ் வலை

சென்னை: தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் குடோன் ஒன்றில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுப்புடவைகளை திருடி சென்ற செக்யூரிட்டியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் திருமண பட்டுச்சேலைகள் விற்பனை செய்யும் பிரபல ஜவுளிக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் குடோன் கடையின் அருகே உள்ளது.  இந்நிலையில் நேற்று காலை குடோனில் இருந்து ரூ.28 மதிப்புள்ள 26 விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கடையின் நிர்வாகம் சார்பில் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபல ஜவுளிக்கடையின் குடோனில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அதில், ஜவுளிக்கடை குடோனில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹராம் என்பவர் நண்பருடன் சேர்ந்து திருடி சென்றது தெரியவந்தது. மேலும், ஜவுளிக்கடையின் குடோன் சாவி கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாயமானது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமான சாவியை செக்யூரிட்டி எடுத்து குடோனில் உள்ள விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடியதும் விசாரணயில் தெரியவந்தது. இதைதொடர்ந்து பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து, பட்டுப்புடவைகளுடன் தலைமறைவாக உள்ள செக்யூரிட்டி மற்றும் நண்பரை தேடி வருகின்றனர்.

Related Stories: