அம்பத்தூர் சிறார் மன்றத்தில் சதுரங்க போட்டி பயிற்சி பட்டறை: முன்னாள் டிஜிபி தொடங்கி வைத்தார்

அம்பத்தூர். அம்பத்தூர் சிறார் மன்றத்தில், சதுரங்க பயிற்சி பட்டறையை காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும்  வகையில் காவல்துறை சார்பில் ‘சிற்பி’ என்ற புதிய திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50  மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களை  தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர்  அரங்கில் நடந்த விழாவில், திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். அதன்படி, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய சிறார் மன்றத்தில், சதுரங்க விளையாட்டு பயிற்சி பட்டறையை தமிழக காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர் தமிழ்ச்செல்வன் நேற்று தொடங்கி வைத்து பேசுகையில்,

‘‘சிறார் தங்களது பள்ளி நேரங்களை தவிர மற்ற நேரங்களில் தவறான பாதைக்கு செல்வதை தவிர்க்கும் விதமாக மாணவ, மாணவிகள் இங்கு வருகை தந்து தங்களது நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்றார். நிகழ்வில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன், உதவி ஆணையர்கள் கனகராஜ், மலைச்சாமி, காவல் ஆய்வாளர்கள் திருவள்ளுவர் தியாகராஜன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: