சிக்கலான கேள்விக்கும் சிம்பிளான பதிலை தரும் சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பார்ட்: சுந்தர்பிச்சை அதிரடி அறிவிப்பு

நியூயார்க்:  இணைய உலகில் தற்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முன்னணியில் இருந்து வருகிறது. பொதுவாக, ஆன்லைனில் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு தாமாக பதிலளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட் ஜிடிபியை அறிமுகப்படுத்தியது.

இது பயனாளர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் கச்சிதமான பதில்களை தரும். வெறும் பதில் மட்டுமல்ல. கட்டுரை எழுதச் சொன்னால், ஒரு நிபுணர் எழுதியது போல் எழுதி தரும். கவிதை எழுதும். செய்தி கட்டுரைகளை எழுதும். பாடல்களைக் கூட எழுதித்தரும். தற்போதுள்ள கடினமான போட்டித் தேர்வு கேள்விகளை கூட எளிதாக விளக்கி பதிலை தரும். இதுவரை பல ஏஐ சாட்பாட்கள் வந்தாலும், சாட்ஜிடிபி போன்ற துல்லியமான சாட்பாட்கள் ஏதுவுமில்லை என்பதால் இது தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய புரட்சி செய்யும் என கூறப்பட்டது. அதோடு தேடுபொறி துறையில் கோலோச்சிய கூகுள் நிறுவனத்தை காலி செய்து விடும் என்றும் கூறப்பட்டது.

இதை சும்மா விடுமா கூகுள். சாட்ஜிடிபிக்கு போட்டியாக கூகுளும் தற்போது ஏஐ சாட்பாட்டை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதற்கு பார்ட் (Bard) என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை நேற்று தனது பிளாக்கில் வெளியிட்ட பதிவில், ‘‘பார்ட் படைப்பாற்றலுக்கு வடிகாலாகவும், ஆர்வத்திற்கான ஏவுதளமாகவும் இருக்கும். இது புத்திச்சாலித்தனம் மற்றும் படைப்பாற்றலுடன் உலக அறிவின் அகலத்தை இணைக்க முயல்கிறது. முதற்கட்டமாக நம்பிக்கையான சோதனையாளர்களுக்கு மட்டும் பார்ட் சேவை வழங்கப்படும். பின்னர் விரைவில் அனைத்து மக்களும் பார்ட் சேவையை பெறலாம். இது, நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பற்றிய சிக்கலான அறிவியல் விஷயங்களை 9 வயது சிறுவனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமையான பதில்களை தரும்’’ என்றார்.ஏற்கனவே சாட்ஜிடிபியால் படைப்பாற்றலும், யோசிக்கும் திறனும் மங்கிவிடும், பலரது வேலை காலியாகி விடும் என செய்திகள் உலா வரும் நிலையில், கூகுள் பார்ட் அதீத சக்திகளுடன் வரப்போவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: