குக்கர் சின்னம் கிடைக்காததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: குக்கர் சின்னம் கிடைக்காததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஒன்றாக இருந்தபோது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி.தினகரன் தனியாக அமமுக என கட்சி தொடங்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போடியிட்டது ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக தரப்பில் சிவபிரசாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட முத்துகுமார் வெறும் 1,204 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலிலும் மிகக்குறைவான வாக்குகளையே பெற்று படுதோல்வி அடைவோம் என்பதை அறிந்த அமமுகவினர், அதிமுகவுக்கு சமரசம் செய்தது போல பாஜ தரப்பில் தங்களையும் அழைத்து பேசுவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் அமமுகவை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் இடைத்தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என கூறி போட்டியிலிருந்து அமமுக விலகியுள்ளது.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமமுகவுக்கு கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையை கருத்தில்கொண்டு, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* நோட்டாவை விட குறைவான வாக்குகள்

கடந்த 2021 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1.5 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில் அமமுக வேட்பாளர் முத்துகுமார் 1,204 வாக்குகள் மட்டுமே பெற்றார். இது ஒரு சதவீத்திற்கும் குறைவு. நோட்டாவில்  1,546 வாக்குகள் பதிவானது.

Related Stories: