எம்ஜிஆர், ஜெ. கட்சியை அடமானம் வைத்துவிட்டனர் எஜமானாக அதிமுகவுக்கு உத்தரவு போடும் பாஜ: ஜவாஹிருல்லா

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மனிதநேய மக்கள் அக்கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவதற்காக மனிதநேய மக்கள் கட்சி முழுநேர களப்பணியாற்றி வருகிறது. அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, சிறுபான்மையின மக்களுக்கு விரோதமாக செயல்படக்கூடிய பாஜவிற்கு துணையாக இருக்கும் அதிமுகவிற்கு தகுந்த பாடத்தை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் தர வேண்டும்.

அதிமுக கட்சியின் எஜமானாக பாஜ இருக்கிறது. அக்கட்சிதான் அதிமுகவிற்கு உத்தரவு போடுகிறது. பாஜ உத்தரவிட்டதன் அடிப்படையிலே ஓபிஎஸ் வேட்பாளரை விலக்கிக் கொண்டு விட்டார். எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சியை, ஒன்றிய அரசுக்கு எதிராக மாநிலங்களின் உரிமைக்காகவும், வலிமையாகவும் நின்ற ஜெயலலிதா வளர்த்த கட்சியை இபிஎஸ், ஓபிஎஸ் பாஜகவிடம் அடகு வைத்து விட்டனர். இந்திய வரலாற்றில் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ ஆகியவற்றை எல்லாம் தனியாரான அதானிக்கு அடகு வைத்து மிகப்பெரிய ஒரு ஊழல் நடைபெற்று இருக்கிறது. அதானி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை அதானிக்கு தர வேண்டும் என ஏற்பாடு செய்தது மோடி தான். இவ்வாறு கூறினார்.

* வேட்பாளரை நிற்க வைக்கவே கடும் போராட்டம் பாஜவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்கள்: பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று சேலம் வந்தார். அவர், கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: வெறுப்பு அரசியலை பேசியவர் நீதிபதியாக வந்திருப்பது, நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை குறைக்கும். அதனால், அவரை நியமித்ததை எதிர்த்து குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். ஒன்றிய பட்ஜெட்டில், முக்கிய திட்டங்களுக்கு நிதி குறைப்பு செய்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 27, 28ம் தேதிகளில் பிரமாண்ட எதிர்ப்பு இயக்க போராட்டம் நடத்தப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுகவால் ஒரு வேட்பாளரை அறிவித்து, அவரை நிற்க வைக்கவே கடும் போராட்டம் நடந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் என குழப்பம். அதனால், அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இரட்டை இலை சின்னத்தில்தான் பர்கூரில் ஜெயலலிதாவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தோற்றார்கள். இப்போது அதிமுகவை பாஜவிடம் அடமானம் வைத்து விட்டார்கள். பாஜவை எதிர்க்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தேவை. அந்த தேவையை கருத்தில் கொண்டு இணைந்திருக்கிறோம். கலைஞர் கருணாநிதி மிகப்பெரிய ஆளுமை கொண்டவர். அவருக்கான நினைவு சின்னம் எல்லோரும் ஏற்கும் வகையில், சர்ச்சை இல்லாமல் வைத்திட வேண்டும். இவ்வாறு அவர்  கூறினார். 

Related Stories: