அடுத்தடுத்த பூகம்பத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி, சிரியாவில் 20,000 பேர் பலி?.. ஐ.நா அதிகாரி கணிப்பு

* 5,000 பேர் பலியானதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

* மீட்பு பணியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் களம் இறங்கின

இஸ்தான்புல்: துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில் உள்ள காஜியான்தெப் நகரிலிருந்து 33 கி.மீ. தொலைவில், 18 கி.மீ. ஆழத்தில் நேற்று அதிகாலை 6.45 மணியளவில் (இந்திய நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில் இப்பகுதியிலிருந்து 100 கி.மீ. தொலைவை மையமாகக் கொண்டு மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்தது. சிரியாவின் அலெப்போ, ஹமா ஆகிய நகரங்களிலிருந்து வடகிழக்கில் துருக்கியின் தியார்பக்கிர் நகரம் வரை சுமார் 330 கி.மீ. தொலைவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.

வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதும் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர். சில விநாடிகளுக்குள் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்துக்குப் பின்னர் ஏற்பட்ட அதிர்வுகளும் நீண்ட நேரத்துக்கு உலுக்கிக் கொண்டிருந்தன. மலைபோல் குவிந்த கட்டட இடிபாடுகளில் குழந்தைகள் முதல்  முதியோர் வரை ஆயிரக்கணக்கானோர் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். துருக்கி, சிரியா மட்டுமின்றி கிரீன்லாந்து, டென்மார்க், எகிப்து, லெபனான் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள், பேஸ்புக் நேரலையில் தாங்கள் உயிருக்கு போராடி வருவதாக ஒளிபரப்புகின்றனர். அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெஞ்சை உலுக்குகின்றன. பேரழிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை நிலவரப்படி துருக்கியில் 2,379 பேர், சிரியாவில் 1,444 பேர் என இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5,000ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்; மீட்புப் பணிகள் ெதாடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் அதிர்வுகள் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை 10,000 பேர் வரை உயரக்கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா நாடுகளுக்கான மூத்த அவசரகால அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் கூறுகையில், ‘துருக்கி, சிரியா பலி எண்ணிக்கை 20,000-ஐ தாண்டும். பலியானவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பலி எண்ணிக்கையை காட்டிலும் எட்டு மடங்கு அதிகமாக இருக்கும். அடுத்த வாரம் முழு அறிக்கை கிடைக்கும்’ என்றார். பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து, 7 நாட்கள் தேசிய துக்கத் தினம் கடைபிடிப்பதாக துருக்கியின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்புப் பணி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க ஐரோப்பிய யூனியன், நேட்டோ நாடுகள் உள்பட ஏராளமான நாடுகள் முன்வந்துள்ளன. இந்தியா தரப்பில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரு குழுக்கள் துருக்கிக்கு விரைந்துள்ளன. அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக் குழுக்களும் தயாராகவுள்ளன. துருக்கி அரசு மற்றும் அங்காரா, இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களின் ஒருங்கிணைப்புடன் நிவாரண உதவிகள் அனுப்பப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், கடுங் குளிர் மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணி தாமதமாகி வருகிறது.

சிரியாவில் அரசுக்கு எதிரான குழுக்கள் வசம் உள்ள இத்லிப் மாகாணம் ஏற்கெனவே ரஷ்யா மற்றும் அரசுப் படையினரின் தாக்குதலால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. பெரும்பாலும் உணவு முதல் மருந்துகள் வரை துருக்கியையே நம்பியுள்ள இத்லிப் மாகாண மக்களுக்கு இந்த நிலநடுக்கம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காஜியான்தெப் பிராந்தியத்தில் 1999ல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 18,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே கணித்த ஆராய்ச்சியாளர்

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை, டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் என்பவர் மூன்று நாள்களுக்கு முன்பே துல்லியமாகக் கணித்து வரைபடத்துடன் டுவிட்டர் செய்திருக்கிறார். அது தற்போது லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது. அந்த பதிவில், மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வரைபடத்துடன் தெரிவித்துள்ளார்,

ஐ.எஸ் தீவிரவாதிகள்

துருக்கி எல்லைக்கு அருகில் உள்ள ராஜோ நகர் சிறையில் சுமார் 2,000 கைதிகள் உள்ளனர்; அவர்களில் 1,300 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆவர். இந்நிலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், ராஜோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 ஐஎஸ் தீவிரவாத கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

20 ஆண்டுகளில் பல லட்சம் பேரை காவு வாங்கிய பூகம்பம்

* ஆகஸ்ட் 14, 2021 -  தெற்கு ஹைதியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது; 2,200க்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்தன.

* செப்டம்பர் 28, 2018 - இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது; 4,300க்கும் அதிகமானோர் பலியாகினர்.

* நவம்பர் 12, 2017 - ஈரானின் கிழக்கு கெர்மன்ஷா பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

* செப்டம்பர் 19, 2017 - மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 359 பேர் பலியாகினர்.

* ஆகஸ்ட் 24, 2016 - இத்தாலியின் ரோம் நகருக்குக் கிழக்கே 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 300 பேர் பலியாகினர்.

* ஏப்ரல் 16, 2016 - ஈக்வடார் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது பசிபிக் கடற்கரையோரம் வசித்த 650க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

* அக்டோபர் 26, 2015 - ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு பாகிஸ்தானில் 400 பேர் இறந்தனர்.

* ஏப். 25, 2015 - நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது 9,000 பேர் பலியாகினர்.

* ஆகஸ்ட் 3, 2014 - சீனாவின் தென்மேற்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது 600 பேர் உயரிழந்தனர்.

* செப்டம்பர் 24, 2013 - பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் 7.7 மற்றும் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் 825 பேர் பலியாகினர்.

* ஆகஸ்ட் 11, 2012 - ஈரானின் தப்ரிஸ் நகருக்கு அருகே முறையே 6.4 மற்றும் 6.3 என்ற அளவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் 300 பேர் பலியாகினர்.

* அக்டோபர் 23, 2011 - துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது 600க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

* மார்ச் 11, 2011 - ஜப்பானின் வடகிழக்கில் 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியது. அப்போது 15,690 பேர் பலியாகினர்.

* பிப்ரவரி 22, 2011 - நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது 180 பேர் இறந்தனர்.

* பிப் 27, 2010 - சிலியில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

* ஜனவரி 13, 2010 - ஹைதியில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது 3,16,000 மக்கள் பலியாகினர்.

* மே 12, 2008 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது 87,600 பேர் பலியாகினர்.

* டிசம்பர் 26, 2004 - ஆசியாவின் சுமத்ராவில் 9.15 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்ட போது இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த 2,30,000 பேர் பலியாகினர்.

* அக்டோபர் 8, 2005 - பாகிஸ்தானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது 73,000 பேர் பலியாகினர். அப்போது இந்தியாவின் காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு 1,244 பேர் இறந்தனர்.

* டிசம்பர் 26, 2003 - ஈரானின்  தென்கிழக்கு கெர்மன் மாகாணத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது 31,000 பேர் பலியாகினர்.

Related Stories: