மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகின்றது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (07.02.2023) கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர், அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில் யானை “கல்யாணிக்கு“ ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள யானை குளியல் தொட்டியினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பேரூர் மடத்தில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் கௌமார மடாலய ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் 84 மாணாக்கர்களுக்கு தீட்சை வழங்கும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்து கொண்டு தீட்சை பெற்ற மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படுகின்ற அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் பயிலும் 84 மாணவர்களுக்கு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் கௌமார மடாலய ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமி ஆகியோர் தீட்சை அருளுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

2006 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளை தொடங்க அரசாணை பிறப்பித்தார்கள். அதன்படி, 2007 ஆம் ஆண்டில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. கடந்த காலங்களில் அப்பள்ளிகளில் மாணவர்  சேர்க்கை வெகுவாக குறைந்ததோடு, அளிக்கப்படும் பயிற்சிகளும் தரமற்ற நிலையில் இருப்பதை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய பள்ளிகளை தொடங்கவும் உத்தரவிட்டார்கள்.  

அதனைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளை மேம்படுத்தியதோடு, புதிய பள்ளிகளும் தொடங்கப்பட்டன. அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நாதஸ்வரம் மற்றும் தவில், நாலாயிர திவ்ய பிரபந்தம், வேத ஆகமப் பயிற்சி என 5 நிலைகளில் பயிற்சி பெறுவதற்கு 15 பயிற்சி பள்ளிகளில் 210 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் முதற்கட்டமாக இன்றைய தினம் 84 மாணவர்களுக்கு தீட்சை வழங்கப்பட்டுள்ளது. எங்கும் தமிழ் மணம் கமல்வதற்கும், எதிலும் தமிழ் மணம் வீசுவதற்கும் ஆன்மீகத்தில் தமிழ்நாடு முதன்மை பெறுவதற்கும் என்றைக்கும் இந்த ஆட்சி துணையாக இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக திகழ்கின்றது.

இந்து சமய அறநிலையத்துறையில் ஒட்டுமொத்தமாக 27 திருக்கோயில்களில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 25 திருக்கோயில்களில் குளியல் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ளன. 2 இடங்களில் யானை குளியல் தொட்டிகள் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யானைகள் நடைப்பயிற்சிக்கு மணலும் களிமண் கலந்த நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருவதோடு, மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கின்ற உணவு வகைகள் ஒவ்வொரு யானைக்கும் வழங்கப்படுகின்றன.

15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இன்றைய தினம் ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் பேரூர், அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில் யானையான கல்யாணிக்கு குளியல் தொட்டி கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, கடந்த காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் இருந்த தொய்வான நிலை முழுவதுமாக அகற்றப்பட்டு,  இன்றைக்கு பக்தர்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகின்ற துறையாக இந்து சமய அறநிலையத்துறையும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசாக தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசும் திகழ்ந்து வருகின்றது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ராஜாமணி, இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, உதவி ஆணையர் விமலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: