யாராவது 'லிங்க்'அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அது ஆபத்து என்று அர்த்தம்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை: யாராவது லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அது ஆபத்து என்று அர்த்தம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாணவிகள் மத்தியில் உரையாற்றிய அவர் கூறியதாவது: இந்த நவீன காலத்தில் சைபர் கிரைம் மற்றும் செக்யூரிட்டி குறித்து எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியமாகும். இளைய தலைமுறை மாணவ-மாணவிகள் இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் 4 விதமான மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதில் உடல் மொழி முக்கியமானது.

இணையம் உலகளாவிய புத்தகம் ஆகும். அதில் தேடினால் எல்லாம் கிடைக்கும். முன்பெல்லாம் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து தான் திருடினார்கள். இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகிறார்கள். அப்படியான சாப்ட்வேர்களில் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

சைபர் செக்யூரிட்டி நன்றாக இருக்க வேண்டுமென்றால் இன்றைய மாணவர்களாகிய நீங்கள் அதனை நன்றாக படிக்க வேண்டும். லிங்க் என்றாலே ஆபத்து தான். அது குறித்து விழிப்புணர்வு மிக முக்கியம் தேவை. யாராவது லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அது ஆபத்து என்று அர்த்தம்.

உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகம் கூகுள்தான். உலகமே டிஜிட்டலாக மாறி வருகிறது. தமிழ்நாட்டில் காவல் உதவி என்ற செயலியை தமிழ்நாடு காவல்துறை செயல்படுத்தி வருகிறது. அதில் 66 விதமான வசதிகள் உங்களுக்காக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: