17 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 444 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்..!!

சென்னை: 17 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 444 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கும் ஆணைகளை வழங்கினார்.

மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, காலிப் பணியிடங்களை நிரப்புதல், புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு நாட்டினுடைய முன்னேற்றத்தை அந்த நாட்டில் வசிக்கும் பெண்களின் நிலையை வைத்து அறிந்து கொள்ளலாம் என்பதற்கேற்ப, மகளிருக்கு சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் மகளிர் மேம்பட மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம்,  புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். பெண்களின் மேம்பாட்டிற்காக இவ்வரசு முக்கியத்துவம் அளித்து வருவதால் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பெண்கள் அதிக அளவில் தேர்வு பெற்று அதிகாரம் மிக்க பதவிகளை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 17 நபர்களில், 13 பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  அதேபோன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால்  காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு  தேர்வு செய்யப்பட்ட 311 ஆண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 133 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 444 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.    

பணிநியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு மார்ச் 1 முதல் வண்டலூர், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு இ.ஆ.ப, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பணீந்திரரெட்டி, இ.ஆ.ப காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் / காவல்துறை இயக்குநர் திருமதி சீமா அக்ரவால், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: