நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பைக் மீது கார் மோதி விபத்து: பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவர் பலத்த காயமடைந்தார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேடு அடுத்த பெருமாப்பட்டியை சேர்ந்தவர் வசந்த் (17), இவர் செம்மடு பகுதியில் உள்ள பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.  

இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து வசந்த், தனது வகுப்பில் படிக்கும் தின்னனூர்நாடு பகுதியை சேர்ந்த  அகிலன் (17) என்ற மாணவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். செம்மேடு பகுதியில் மலைப் பாதையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது, இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த அகிலன் மீது, கார் சக்கரம் ஏறியதில் அவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வசந்த பலத்த காயமடைந்தார், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழவந்திநாடு போலீசார், விபத்தில் பலியான மாணவர் அகிலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநர் வாழவந்திநாட்டை சேர்ந்த பாசக்குமார் (48) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: