சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்காக வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகு 40 ஆயிரம் மாணவ-மாணவியர் விண்ணப்பித்தனர். வேளாண் படிப்புகளில் இந்த கல்வி ஆண்டில் 6 ஆயிரத்து 600 இடங்கள் உள்ளன. அதில் பல்கலை மற்றும் அரசுக் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், வேளாண் பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதிக் கல்லூரிகளில் ஐசிஎஸ்ஆர் அங்கீகாரம் பெற்றவற்றில் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. இரண்டாம் அடுக்கு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது.
அந்தக் கல்லூரிகளிலும் அரசின் ஒதுக்கீட்டு இடங்களான 65 சதவீத இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களான 35 சதவீத இடங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை 2 கட்டமாக நடத்தப்பட்டுள்ளது. மே லும், 2 கட்டமாக நேரடி மாணவர் சேர்க்கை கவுன்சலிங் 4 நாட்களில் நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடக்கும். வேளாண் படிப்புகளில் நடப்பு ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தான் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் புத்தாக்க வகுப்புகள் தொடங்கப்பட்டு நடக்கிறது.
அகில இந்திய அளவிலும் வேளாண்மை படிப்புகள் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை 2023-2024ம் கல்வி ஆண்டில் அதிகரிக்கவும், முன்கூட்டியே முடிக்கவும் கூடிய புதிய திட்டத்தை செயல்படுத்த பல்கலைக் கழக கல்வி மன்றக் குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, வேளாண் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஒரு மாத காலத்துக்கு ஆன்லைன் மூலம் பெறப்படும். அதைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 15ம் தேதிக்கு பிறகு மாணவர்கள் சேர்க்கை நடத்தி, ஜூலை 15ம் தேதி முதல் வகுப்புகள் ெ தாடங்கும். அதற்கு பிறகும் வரும் மாணவர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். அவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் வகுப்புகள் தொடங்கி, பாடத்தை நடத்தி அவர்கள் முதல் பருவத் தேர்வை மற்ற மாணவர்களுடன் சேர்ந்து எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். வருங்காலங்களில் இந்த முறையே பின்பற்றப்படும். மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறுவது, கவுன்சலிங் உள்ளிட்டவை ஆன்லைன் மூலம் நடந்தாலும், கட்டணங்கள் செலுத்துவது, சான்றுகள் சரிபார்ப்பு ஆகியவை நேரடியாக நடக்கும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 18 அரசுக் கல்லூரிகளும், 28 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இவ்வாறு துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.