ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுகவில் 40 நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுகவில் 40 நட்சத்திர  பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதில்  முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின்  உள்ளிட்டோர் இடம்  பெற்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி  நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. திமுக  கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக  அமைச்சர்கள், திமுக முன்னணியினர், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கூட்டணி  கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும்  குறுகிய நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் இன்னும் விறுவிறுப்படைய  தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை  ஆதரித்து திமுகவில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.  அவர்களின் பெயர் பட்டியலை திமுக தலைமை கழகம் தமிழக தலைமை தேர்தல்  அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளது. அந்த நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளார். மேலும் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முத்துச்சாமி, சக்கரபாணி, செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு,  தா.ேமா.அன்பரசன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர் உள்ளிட்ட 40 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: