பொன்னேரி-மணலி இடையே குண்டும் குழியுமான சாலையால் விபத்து: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருவொற்றியூர்: மணலி அருகே குண்டும் குழியுமான பொன்னேரி நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூரில் இருந்து பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக மாதவரம், மீஞ்சூர், பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள், கன்டெய்னர் லாரிகள், கார், பைக் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மாதவரம் 200 அடி சாலை - பொன்னேரி நெடுஞ்சாலை சந்திப்பில் சாலை பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதாகி நின்று விடுகின்றன. மேலும், பைக்கில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து போலீசார் வாகனங்களை குறைவான வேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர். இதனால், இந்த இடத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதால் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், \”பொன்னேரி நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் வரிவசூல் செய்யப்படுகிறது. ஆனால், அதிகளவில் வாகனங்கள் செல்லக்கூடிய சாலையை சீரமைப்பதில்லை. சுங்க கட்டணம் வசூல் செய்கிறார்களே தவிர சாலையை அவர்கள் பராமரிப்பதில் அலட்சியமாக உள்ளனர். பல இடங்களிலும் இதேநிலை இருப்பதால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: