ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: ‘‘ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி வழங்கப்படுவதாக” சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற ஏஎம்சிஏடி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிபெற அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கான கால அளவு 3 மாதங்கள். பயிற்சிக்கான அனைத்து செலவும் தாட்கோவால் வழங்கப்படும். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஏஎம்சிஏடி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஏஎம்சிஏடி சான்றிதழும் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம். பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். தொலைபேசி எண். 044-25246344 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: