தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் வேகத்தடைகள் இல்லாததால் உயிரிழப்பு அபாயம்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

தாம்பரம்: தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில், வேகத்தடைகள் இல்லாததால் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு தாம்பரத்தில் இந்திய விமானப்படை பயிற்சி நிலையம் உள்ளது. இந்த பயிற்சி நிலையத்துக்கு செல்லும் ஐஏஎப் சாலை, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து தொடங்கி விமானப்படை பயிற்சி நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளது. இந்த சாலையில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி நுழைவாயில், பள்ளி மற்றும் தனியார் மருத்துவமனை, தனியார் நிறுவன அலுவலகங்கள், ஓட்டல்கள், குடியிருப்பு வீடுகள் என ஏராளமாக உள்ளன.

அதேபோல, இந்த சாலை வழியாக புரொபசர் காலனி, ஆதி நகர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக ஐஏஎப் சாலை உள்ளது. இதனால் இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்திய விமானப்படை பயிற்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, அப்போது இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி வந்து கலந்து கொண்டார்.

அவரது வருகையொட்டி, அப்போதைய தாம்பரம் நகராட்சி சார்பில் ஐஏஎப் சாலையிலிருந்து வேகத்தடைகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு, புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்படாமல், இதுவரை அந்த சாலை வேகத்தடை இல்லாமலேயே உள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வேகத்தடைகள் இல்லாததால், அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் எப்போதும் அதிவேகமாக மட்டுமே செல்கின்றன. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் ஐஏஎப் சாலையில் அதிவேகமாக செல்வதுடன் சாகச செயல்களிலும் ஈடுபட்டு வருவது வழக்கமாக உள்ளது.

இதுபோன்று, அதிவேகமாக வாகனங்கள் செல்லும்போது சாலையின் ஓரம் நடந்து செல்பவர்கள், சாலையை கடக்க முயற்சிப்பவர்கள், ஆங்காங்கே உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் திரும்ப முயற்சிப்பவர்கள் என ஏராளமானோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற விபத்துகளில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் உயிரிழப்புகள் ஏற்படும்போது சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நலச்சங்க நிர்வாகிகள் என அனைவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால், ஐஏஎப் சாலையில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன. தற்போது, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் அதிகாரிகள் வேகத்தடைகளை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.    

* மாமன்ற உறுப்பினர் கோரிக்கை

கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.இ.எஸ் சாலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த சாலையில் இருந்த வேகத்தடைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் இங்கும் வாகனங்கள் அதி வேகமாக செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. பள்ளிகள் இருக்கும் பகுதியில் மற்றும் சாலை சந்திப்புகள் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி 63வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜோதிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

* பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள்

வேகத்தடைகள் இல்லாதது பற்றி சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தாம்பரம் ஐஏஎப் சாலை அகலப்படுத்தப்பட்டு, புதிதாக சாலை அமைக்கப்பட்ட பின்னர் மிகவும் பிரமாண்டமான சாலையாக காட்சியளிக்கிறது. இந்திய விமானப்படையை சேர்ந்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த  சாலையில் பல ஆண்டுகளாக வேகதடைகள் அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் எப்போதும் அதிவேகத்தில் செல்கின்றனர். இப்படி செல்லும் வாகனங்கள் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் நிகழ்கிறது.

இதுபோன்ற விபத்துகளால் பெரும்பாலானோர் பலத்த காயமடையும் நிலை ஏற்படுவதுடன், சிலர் உயிரிழக்கவும் செய்துள்ளனர். சில சமயங்களில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பலத்த சேதமடைகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பெரும்பாலானோர் வேகத்தடை இல்லாமல் சாலை இருப்பதால் பைக் ரேஸ் போன்று சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இரவு நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. தினமும் இந்த சாலையில் ஒருவர் அடிபட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.

இந்த சாலையில் முக்கிய பகுதிகளான பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தேவாலயம் உள்ள இடங்கள், சாலை சந்திப்புகளில் வேகத்தடை அமைப்பதோடு போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்தப்பட வேண்டும். இவ்வாறு வேக தடைகள் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டு, போக்குவரத்து போலீசார் பணி அமர்த்தப்படும் பட்சத்தில் விபத்துகள் குறையும், வாகன ஓட்டிகளும் குறைந்த வேகத்தில் செல்வார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த நடவடிக்கை பாதுகாப்பாக அமையும். எனவே, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஐஏஎப் சாலையில் உள்ள முக்கிய பகுதிகளில் வேகத்தடைகள் அமைத்து சாலையை விபத்திலா சாலையாக மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: