ஏரலில் உள்ள பெருங்குளம், பேரூர் குளங்களில் அமேசான் காடுகளில் காணப்படும் ‘பேய் மீன்’ சிக்கியது: மீனவர்கள் அதிர்ச்சி

ஏரல்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பெருங்குளம், பேரூர் குளங்களில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது வலையில் ஒரு அரிய வகை மீன்கள் சிக்கியுள்ளது. இந்த வகை மீன்கள் இதுவரை வலையில் சிக்கியதில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த முத்துநகர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் தாமஸ் மதிபாலன் பிடிபட்ட மீன்களை பார்வையிட்டார். அப்போது, தென் அமெரிக்காவில் உள்ள அமேசோன் காடுகளில் காணப்படும் பேய் மீன் எனப்படும் உறிஞ்சி தேளி மீன் என்றும், இந்த மீன்கள் மிகவும் ஆபத்தானவை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தாமஸ் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக நமது பகுதி குளங்களில் ஆப்ரிக தேளி மீன்கள் அதிக அளவு காணப்பட்டு வருகிறது. இந்த மீன்கள் அதிக அளவில் பெருகி வருவதால் நம்நாட்டு மீன்களான உளுவை, விலாங்கு, ஆரால், செள்ளப்பொடி இந்த வகையான பெருவாரியான மீன்கள் அழிந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இங்கு தற்போது மீன் வலையில் மாட்டியுள்ள இந்த மீனானது தென் அமெரிக்கா நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் காணப்படும் உறிஞ்சி தேளி மீனாகும். இந்த வகை மீன்கள் ஆப்பிரிக தேளி மீன்களை விட அதிகளவில் நீர்நிலைகளை பாதிப்புகளை உள்ளாக்கி விடும்.

இந்த வகை மீன்களை வண்ணமீன் வளர்ப்பவர்கள் மீன் தொட்டியை சுத்தமாக வைத்து கொள்ள வளர்த்து வந்தனர். தற்போது நமது நீர் நிலைகளில் இந்த மீன் வகை கலந்து விடப்பட்டுள்ளது. இந்த மீனின் தோல் மிகவும் கடினமாகவும், உடல் சதைப்பற்றில்லாமல் இருக்கும். உணவுக்காக இதனை நாம் பயன்படுத்த முடியாது. சமீபத்தில் ஆந்திராவில் கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் இதைக் கண்ட அம்மாநில மக்கள் இதை டெவில் பிஷ் என்று அழைக்கிறார்கள்.

பல நாடுகளில் இந்த வகை மீன்கள் தடை செய்யப்பட்டு விட்டது. இந்த மீன்கள் முட்டையிடுவதற்காக கரைப்பகுதிகளை துளையிடும் பழக்கம் உள்ளதால் இந்த மீன்களால் குளத்து கரையோரப்பகுதி உடையும் அபாயமும் உள்ளது. எனவே அரசு தக்க ஆய்வு நடத்தி இந்த வகை மீன்கள் பரவாமல் இருப்பதற்கு வழி செய்திட வேண்டும்’ என்றார்.

Related Stories: