ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் டிஎல்எஃப் சைபர்சிட்டி, போரூர் வரை தனியார் வாகன இணைப்பு சேவை: மு.அ.சித்திக் தொடங்கி வைத்தார்

சென்னை: அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் டிஎல்எஃப் சைபர்சிட்டி, போரூர் வரை தனியார் வாகன இணைப்பு சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் தொடங்கி வைத்தார். சென்னை, போரூர் டிஎல்எஃப் சைபர் சிட்டி வளாகத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைந்து டிஎல்எஃப் சைபர் சிட்டியில் பணிபுரிவோரின் போக்குவரத்து நலன் கருதி அவர்களுக்கான தனியார் வாகன இணைப்பு சேவை தொடங்கப்பட்டது.

இந்த சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, (அமைப்புகள் மற்றும் இயக்கம்) முன்னிலை வகித்தார். தனியார் வாகன இணைப்பு சேவையை தொடங்கி வைத்த மேலாண்மை இயக்குனர் மு.அ. சித்திக் பேசியதாவது:- சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இணைப்பு சேவைகளை மெட்ரோ இரயில் நிலையங்களில் வழங்கி வருகிறது.

இந்நிலையில், டிஎல்எஃப் சைபர்சிட்டி நிறுவனத்தில்  பணியாற்றுபவர்கள் நலன் கருதி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஃபாஸ்ட் டிராக் நிறுவனத்துடன் இணைந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் முதல் டிஎல்எஃப் சைபர்சிட்டி, போரூர் வரை தனியார் வாகன இணைப்பு சேவையை தொடங்கியுள்ளது. குளிரூட்டப்பட்ட 12 இருக்கைகள் கொண்ட நான்கு (4) ஃபாஸ்ட் டிராக் வேன்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் முதல் டிஎல்எஃப் சைபர்சிட்டி, போரூர் வரை இயக்கப்படும்.

ஒரு நபருக்கான கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. QR குறியீடு (UPI) மற்றும் மொபைல் செயலி மூலம் மட்டுமே வாகனத்தில் ஏறும் போது பயணிகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த இணைப்பு சேவை டிஎல்எஃப் சைபர்சிட்டியில் பணியாற்றும் பல்வேறு ஐடி பணியாளர்களுக்காகவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை நீங்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  இந்த சேவையால் கால நேரம் வீணாகாது. இந்த இணைப்பு சேவையை பொறுத்தவரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் சேவையை வழங்குபவருக்கும் பயணிப்பவர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே மேற்கொள்ளும்.

இந்த இணைப்பு சேவைக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஃபாஸ்ட் டிராக் நிறுவனத்தின் பொறுப்பாகும். விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நிரந்தர பொதுப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, 128 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் 119 கி.மீ நீளத்திற்கு ரூ. 63,246 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ இரயிலின் கட்டம் -II ஐ மே 2026க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்ற வசதிகள் மற்ற முக்கியமான பெரிய வணிக வளாகங்களிலும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மெட்ரோ கனெக்ட் என்ற திட்டத்தை நாங்கள் உருவாக்கிவருகிறோம்.

இது மூலமாக பெரிய அலுவலக வளாகங்களில், கல்லுரி, வணிக வளாகங்கள் போன்ற இடங்களிலும் இணைப்பு சேவையை வழங்க விரும்புகின்றோம். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு அடைந்த பிறகு சென்னையில் உள்ள அனைத்து இடங்களும் மெட்ரோவில் இணைக்கப்படும். அந்த சமயத்திலும் மெட்ரோ இணைப்பு சேவையை வழங்கும். இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் பேசினார். முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ. சித்திக் மற்றும் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ஆகியோர் டிஎல்எஃப் சைபர்சிட்டி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்வில், டிஎல்ப் செயல் இயக்குனர் அமித் குரோவர், வரரேற்று பேசினார். டிஎல்ப் முதுநிலை துணை தலைவர் டேவிட் அமல்ராஜ், உதவி துணை தலைவர் அமித் சிங்கள், பாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் இயக்குனர் அம்பிகாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். டிஎல்ப் உதவி துணை தலைவர் கோகுல்நாதன் நன்றி கூறினார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மற்றும் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.

Related Stories: