ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளர் தென்னரசுவுக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு.. சி.வி.சண்முகம் எம்.பி. பேட்டி..!!

டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் தென்னரசுவுக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று சி.வி.சண்முகம் தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை அளித்த பின், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம் எம்.பி. பேட்டியளித்தார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை தேர்வு செய்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவை தமிழ்மகன் உசேன் சமர்ப்பித்தார். வேட்பாளர் தென்னரசுவை பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்த ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன என்று கூறினார்.

தென்னரசுவுக்கு 2,501 உறுப்பினர்கள் ஆதரவு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,646 பேருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. 145 பொதுக்குழு உறுப்பினர்கள் படிவங்களை அனுப்பவில்லை. ஆடத் தெரியாதவர்கள் மேடை சரியில்லை என்று பேசுவார்கள்; அவர்கள் கதையை பேச தயாரில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு சி.வி.சண்முகம் மறுப்பு:

பொதுக்குழு உறுப்பினர்கள் வேறொரு நபரை வேட்பாளராக பரிந்துரைக்கலாம் என்று படிவத்தில் வாய்ப்பு தரப்பட்டது. ஒரு வேட்பாளர் பெயரை மட்டும் பரிந்துரை செய்ததாக பன்னீர் தரப்பு கூறிய குற்றச்சாட்டுக்கு சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்வதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது எனவும் சி.வி.சண்முகம் குறிப்பிட்டார்.

Related Stories: