விராலிமலை முருகன் கோயிலில் தனி குளியலறை, உடை மாற்றும் அறை அமைக்கப்படுமா?

*பக்தர்கள் எதிர்பார்ப்பு

விராலிமலை : விராலிமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் வேண்டுதல் நிறைவேற்ற வந்த பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின்னர் குளியலறை இல்லாமலும் உடைமாற்றும் தனியறை இல்லாமலும் தவித்தனர். இதுகுறித்து மாவட்ட தேவஸ்தான நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவித்தனர்.

விராலிமலை முருகன் மலைக்கோயில் மாவட்டத்தில் உள்ள பெரிய கோயிலாகும் அதே வேளையில் உண்டியல் காணிக்கை வசூலில் பெரும் தொகையை தனது பங்களிப்பாக வருடம் முழுவதும் அளித்து வருகிறது. இக்கோயிலின் உண்டியல் காணிக்கையை நம்பியே மாவட்டத்தில் பல சிறிய கோயில்கள் பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்கு வெளிமாநிலம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து விராலிமலை வந்து தங்கி இருந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். இவ்வாறு வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். விழா நாட்கள் மட்டும் அல்லாது தினம்தோறும் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் அதிகளவில் முடி காணிக்கை செலுத்துவதற்கு பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவ்வாறாக இங்கு முடி காணிக்கை செலுத்திய பின்னர் குளிப்பதற்கு தனி குளியலறையோ குளித்த பின் அவர்கள் உடை மாற்றுவதற்கு தனி அறையோ தற்போது வரை இல்லாதது பக்தர்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தி வருகிறது. முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள குழாயை திறந்து அதிலிருந்து வெளியேறும் நீரில் திறந்த வெளியில் நின்று அவர்கள் குளிக்கின்றனர்.

அதிலும் முடி காணிக்கை செலுத்தும் பெண் பக்தர்களின் நிலை மிகவும் வேதனைகுறியதாக உள்ளது.இந்நிலை குற்றச்சம்பவங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக அமைந்துவிடும் இதை நாம் எளிதில் கடந்து செல்ல முடியாது இன்று வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவர் கையிலும் நவீன தொழில்நுட்பம் அடங்கிய கைப்பேசி தவழ்கிறது அதை பயன்படுத்துவோரை பொறுத்தே தொழில்நுட்பத்தை புகழ்வதும் இகழ்வதும் அமைந்துள்ளது.

செல்போன் தொழில்நுட்ப்பத்தை பயன்படுத்துவதில் சிலர் ஆக்கபூர்வமான செயலுக்கு பயன்படுத்தினாலும் சிலர் அழிவுக்கு பயன்படுத்துகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே அப்பகுதியில் சுற்றித்திரியும் குரூர எண்ணம் கொண்டவர்களால் அங்கு திறந்த வெளியில் உடைமாற்றும் பொண்களுக்கு ஆபத்து நிகழ்வதற்கு வாய்புகள் அதிகம் உள்ளது.அவ்வாறானவர்கள் செல்போனில் படம் அல்லது வீடியோ பிடித்து விளையாட்டாகவோ, வேண்டும் என்றோ இணையதளங்களில் பதிவிட்டால் பொண்கள் நிலை என்ன ஆவது என்பதை நிர்வாகம் நினைத்து பார்க்க வேண்டும். அந்த வாய்ப்பை அவர்களுக்கு நாமே ஏற்படுத்தி கொடுத்துவிடகூடாது என்பதே சமூத நலனில் அக்கறை கொள்வோரின் எண்ணமாக இருக்கிறது

கடந்த பல ஆண்டுகளாக இது குறித்து மாவட்ட அறநிலையத்துறை நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் தேவஸ்தான நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது தங்களுக்கு மிகவும் வேதனை அளித்து வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

எனவே தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக கோயில்கள் மேம்பாட்டில் தனிகவனம் செலுத்தி அதிக நிதி ஒதுக்கி பல்வேறு ஆன்மீக பணியாற்றி வரும் தமிழ்நாடு அரசும் பக்தர்களின் இக்கோரிக்கையில் தனிகவனம் செலுத்தி குளியலறை மற்றும் உடைமாற்றும் அறை அமைத்து தர வேண்டும் என்பதே பக்தர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: