ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்டது ஐடி அதிகாரிகளிடம் ரூ.40 லட்சம் ஒப்படைப்பு: ஹவாலா பணமா என விசாரணை

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உரிய ஆவணம் இன்றி, வாலிபர் கொண்டு வந்த ரூ.40 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை சவுகார்பேட்டை தங்கசாலை தெருவில் நேற்று யானைக்கவுனி போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி பையுடன் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து, அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். மேலும்,  அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் இருந்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சொரூப் (20) என்பதும், தங்கசாலை பகுதியில் உள்ள எலெக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை. இதனால், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,  சம்பவ இடத்துக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சொரூப்பையும் பணத்தையும் ஒப்படைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சொரூப்பிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: