புழல் மத்திய சிறைச்சாலை அருகில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க்: சிறைத்துறை அதிகாரி தகவல்

புழல்: புழல் மத்திய சிறைச்சாலை அருகில், சிறைத்துறை சார்பில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் அமைய உள்ளதாக, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புழல் மத்திய சிறைச்சாலை காவலர் குடியிருப்பு அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக, கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. இதில் சிறையில் தண்டனை பெற்ற நன்னடத்தை கைதிகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், புழல் சிறைத்துறை சார்பில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புழல் - அம்பத்தூர் சாலையில் சிறை அதிகாரிகள் வளாகம் அருகில்,  தற்போது புதிய பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த புதிய பெட்ரோல் பங்க் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்கிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு தண்டனை பெற்று நன்னடத்தை பெற்ற கைதிகளுக்கு பணியாற்ற ஒரு பெரிய வாய்ப்பு உருவாகும். இதனால் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பணியாற்றும் சிறை கைதிகள் பொதுமக்களை தினசரி சந்திக்கின்ற நேரத்தில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வாய்ப்பாக இந்த வேலை வாய்ப்பு கிடைக்கும்,’’ என்றார்.

Related Stories: