திருவொற்றியூரில் பூட்டி கிடக்கும் பயோ காஸ் மையத்தை செயல்படுத்த நடவடிக்கை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டல அலுவலகம் எதிரே, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில்,  கடந்த 2014ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில், தனியார் தொண்டு நிறுவனம் பயோ காஸ் தயாரிப்பு மையத்தை தொடங்கியது. சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலையில் இருந்து உணவு கழிவுகளை இங்கு கொண்டு வந்து, அதிலிருந்து நவீன முறையில் காஸ் உற்பத்தி செய்து, சப்ளை செய்யப்பட்டது. இதனை, கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனமே இதை பராமரித்து வந்தது. அதன் பின்னர் இந்த பயோ காஸ் மையம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், ஒருசில மாதங்கள் செயல்பட்ட இந்த பயோ காஸ் மையம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று செயல்படாமல் நிறுத்தப்பட்டது.

இதனால், தனியார் தொண்டு நிறுவனம் அமைத்து கொடுத்த, இந்த பயோ காஸ் மைய இயந்திரங்கள் செயல்பாடின்றி கிடக்கிறது. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, சுமார் 6 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான மதிப்புள்ள இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் பாழாகும் நிலை உள்ளது. எனவே, மக்களுக்கு பயன்படக்கூடிய இந்த பயோ காஸ் மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: