சென்னை மக்களுக்கு நீர் வழங்கும் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரிக்கு நீர்வரத்து: அதிகாரிகள் தகவல்

சென்னை: கண்ணண்கோட்டை ஏரி நிரம்பி வருவதால், சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த  கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை பெரிய ஏரிகளை இணைத்து கண்ணன்கோட்டை 1485.16 ஏக்கர் நிலத்தில்  380 கோடி மதிப்பீட்டில் நீர்தேக்கம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பருவ மழை காலம் உள்ளிட்ட பல்வேறு மழை காரணமாக தொடர்ந்து கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்துக்கு அதிக நீர்வரத்து ஆரம்பித்தது. அதன் பின்னர் அதிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு மேற்கண்ட கும்மிடிப்பூண்டி பூலம்பேடு, எளாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா நதிநீர் திருப்பி விடப்பட்டதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு 55கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் தற்போது 467 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. அடுத்த சில நாட்கள் தொடர்ந்து நீர்வரத்து இருந்தால் ஏரி முழுமையாக நிரம்பும். இதனால், அடுத்த சில மாதங்களுக்கு சென்னை மக்களின் குடிநீருக்கான பிரச்னை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: