விலையில் அதிரடி சரிவு தங்கம் 2 நாளில் ரூ.1,360 குறைந்தது: சவரன் மீண்டும் 43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 குறைந்தது. அதேநேரத்தில் சவரன் மீண்டும் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கி உள்ளது. இந்த விலை குறைவு, நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து உயர்ந்து வந்தது. டிசம்பர் மாதம் 31ம் தேதி சவரன் ரூ.41 ஆயிரத்து 40க்கு விற்கப்பட்டது. ஜனவரி 14ம் தேதி சவரன் ரூ.42,368க்கு விற்கப்பட்டது. ஜனவரி 26ம் தேதி தங்கம் ரூ.43,040க்கும் விற்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி பவுன் ரூ.43,328க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அந்த சாதனையை ஜனவரி 26ம் தேதி விலை உயர்வு நெருங்கியது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், பெயரளவுக்கு குறைவதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,338க்கும், சவரன் ரூ.42,704க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2023-2024ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது.  பட்ஜெட்டின் தாக்கம் உடனடியாக தங்கம் விலையிலும் எதிரொலிக்க தொடங்கியது. பட்ெஜட் தாக்கல் செய்யப்பட்ட 1ம் தேதியே தங்கம் விலை கிராமுக்கு ரூ.77 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,415க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,320க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதி, தங்கம் விலை மேலும்  உயர்வை சந்தித்தது.

அதாவது, கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,505க்கும், பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு பவுன் ரூ.44,040க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத சாதனையை படைத்தது. ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,336 வரை உயர்ந்தது. அதேநேரத்தில் டிசம்பர் 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை சவரன் ரூ.3 ஆயிரம் அளவுக்கு உயர்ந்தது. இந்த வரலாறு காணாத தங்கம் விலை ஏற்றம் திருமணம் உள்ளிட்ட விஷேசத்திற்காக நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி, நிலை குலைய வைத்தது.

இப்படியே விலை உயர்ந்தால் நகை வாங்கவே அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுமோ? என்ற அச்சமும் அவர்களிடம் இருந்து வந்தது. மேலும் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.5,415க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.43,320க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலை சரிவு, நகை வாங்குவோரை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று நகை வாங்குவோரை மேலும் மகிழ்ச்சியடைய செய்யும் வகையில் தங்கம் விலை மேலும் அதிரடியாக சரிந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.5,335க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.42,680க்கும் விற்கப்பட்டது.

இதன் மூலம் தங்கம் விலை தொடர்ச்சியாக 2 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,360 அளவுக்கு குறைந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் 43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: