மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா; ஆழியார் ஆற்றங்கரையோரம் நள்ளிரவு மயான பூஜை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஆனைமலை: பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவில், ஆழியாற்றங்கரையோரம் நள்ளிரவில் நடந்த மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து  கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 6ம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மயான பூஜை நேற்று நள்ளிரவு ஆழியாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் நடந்தது.

ஆழியாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் அமைக்கப்பட்ருந்த எரிமேடையில், மாசாணியம்மன் அம்மன் உருவாரம் மண்ணால் அமைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அம்மன் அருளாளி மற்றும் பக்தர்கள் பலர் ஆழியாற்றில் நீராடி, கோயிலுக்கு சென்றனர்.

 இந்நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் பொறிக்கப்பட்டிருந்த அம்மன் உருவாரத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அம்மா தாயே. மாசாணி தாயே’ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தபோது, அம்மன் அருளாளிக்கு அருள் வந்தது, அருள் வந்த அம்மன் அருளாளி அம்மன் உருவாரத்தை சுற்றியபடி வந்து, அதில் மேல்நின்று ஆடினார். பின் உருவாரத்திலிருந்த எலும்பை எடுத்து வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக ஆடினார். மேளம் உருமியடித்தபடி மாசாணியம்மன் வரலாற்று பாடலை பாடிக்கொண்டிக்கும்போது, கூடியிருந்த பெண் பக்தர்கள் பலருக்கும் அம்மன் அருள் வந்து ஆடினர்.  நள்ளிரவு துவங்கிய மயான பூஜை இன்று அதிகாலை வரை நடந்தது.

ஆனைமலை ஆழியார் ஆற்றங்கரையோரம் நடந்த மயான சிறப்பு பூஜையை காண உள்ளூர் மட்டுமின்றி கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை முதல், 6ம் தேதி குண்டம் இறங்கும் பக்தர்கள், கோயில் சன்னதியில் காப்புக்கட்டி சென்றனர். மயான பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 

Related Stories: